செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2024-09-16 19:52 GMT

நெல்லை,

செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினமும் காலை 7.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16848) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இயக்கப்படும் வழித்தடத்தில் திண்டுக்கல் - திருச்சி இடையே ரெயில்வே பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதையொட்டி செங்கோட்டை - மயிலாடுதுறை இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16848) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, வருகிற 19, 20-ந் தேதி மற்றும் 24-ந் தேதி முதல் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி வரை மதுரை, திண்டுக்கல் வழியாக இயங்காது. அதற்கு பதிலாக விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மயிலாடுதுறை நோக்கி இயக்கப்படும். இதனால் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் இந்த ரெயிலை பயன்படுத்த இயலாது. தற்காலிக வழித்தடத்தில் அமைந்துள்ள மானாமதுரை மற்றும் காரைக்குடியில் இந்த ரெயில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் மறுமார்க்கமாக மயிலாடுதுறையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு இரவு 9.30 மணிக்கு வந்து சேரும் (வண்டி எண் 16847) எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்