டங்ஸ்டன் சுரங்கம்; ஒரு வருடத்திற்கு முன்பே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் - சரத்குமார்

டங்ஸ்டன் சுரங்கம் குறித்து ஒரு வருடத்திற்கு முன்பே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.;

Update:2024-12-15 18:26 IST

திருப்பத்தூர்,

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஏலத்தில், வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது.

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் கடந்த 9-ந்தேதி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 'நான் முதல்-அமைச்சராக இருக்கும்வரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் குறித்து ஒரு வருடத்திற்கு முன்பே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க. பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டங்ஸ்டன் சுரங்கம் குறித்து ஒரு வருடத்திற்கு முன்பே புவியியல் ஆய்வு செய்யப்பட்டு கனிம வளம் குறித்து கண்டறியப்பட்டபோது, மாநில அரசு இங்கு சுரங்கம் அமைப்பதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

அந்த இடத்தில் இயற்கை வளங்களும், பண்டைய கால தொல்லியல் சான்றுகளும் உள்ளது என மாநில அரசு கூறியிருந்தால் அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கும். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு மாநில அரசு இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறது. இருந்தாலும், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மக்கள் மனதை புரிந்து கொண்டு மத்திய அரசு செயலாற்றும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்" என்று சரத்குமார் கூறினார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்