மதுரை புத்தக கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது

புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி சென்றனர்.

Update: 2024-09-17 01:58 GMT

மதுரை,

மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் கடந்த 6-ந் தேதி புத்தக கண்காட்சி தொடங்கியது. குளிரூட்டப்பட்ட வளாகத்தில் 230-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரலாறு, கலை, இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், கதை, கவிதை, சுயமுன்னேற்றம் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் ரூ.10 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

அனைத்து புத்தகங்களுக்கும் குறைந்தபட்சமாக 10 சதவீதம் தள்ளுபடியும் அதிகபட்சமாக 25 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கான புத்தக பதிப்பகங்கள் சார்பில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தக கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி சென்றனர்.

மாணவ-மாணவிகளுக்காக தமிழக பாடநூல் கழகத்தின் அரங்கில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களும், கல்லூரி மாணவர்களுக்கான வரலாற்று பாடப்புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள பதிப்புகளுக்கான தனி அரங்கும் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்த புத்தக கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. புத்தக கண்காட்சியை இதுவரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 4 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்