சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது.

Update: 2024-09-17 01:26 GMT

சென்னை,

பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கப்பட்ட திமுகவின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார்.

தொடர்ந்து இயற்கை விவசாயியான 108 வயது மூதாட்டி பாப்பம்மாளுக்கு பெரியார் விருது, திமுக மூத்த உறுப்பினரான அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு அண்ணா விருது, முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கலைஞர் விருது, திமுக தீர்மானக் குழு தலைவர் கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருது, முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜனுக்கு பேராசிரியர் விருது, முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் விருதை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். அதையடுத்து பவள விழா மலரும் வெளியிடப்பட உள்ளது.

திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். பவள விழா பந்தல் அரண்மனை போன்ற தோற்றத்தோடு மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மைதானத்தில் இருந்து விழாவை பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்