உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்

உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

Update: 2024-09-18 12:53 GMT

சென்னை,

உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 30 தமிழர்களில் 17 நபர்கள் விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த நிலையில், இன்று 13 தமிழர்கள் ரெயில் மூலம் சென்னை, எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"உத்தரகாண்ட் மாநிலத்திற்கு புனித யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முப்பது நபர்கள் (17 பெண்கள், 13 ஆண்கள்) அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தமிழ்நாடு திரும்ப இயலாமல் சிக்கிக்கொண்டனர். இச்செய்தியை அறிந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் சிக்கியுள்ள முப்பது தமிழர்களையும் மீட்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் உறுதியளித்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் பிற அரசு துறைகள் உத்தரகாண்ட் மாநில நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக, நிலச்சரிவினால் தமிழகம் திரும்ப இயலாமல் சிக்கியிருந்த 30 தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட 30 தமிழர்களில் 17 நபர்கள் விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த நிலையில், இன்று (18.09.2024) 13 தமிழர்கள், தமிழ்நாடு அரசினால் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டு ரெயில் மூலம் சென்னை, எழும்பூர் ரெயில் நிலையம் அழைத்துவரப்பட்டனர்.

சென்னை வந்தடைந்த தமிழர்களை வேளாண்மை-உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் வரவேற்று அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் மூலம் 13 நபர்களையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்