கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.

Update: 2022-06-03 19:14 GMT

அரியலூர்:

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கருணாநிதி பற்றிய பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு, பெரம்பலூர் அரசு மேல்நிலப்பள்ளியில் தமிழ் வளர்ச்சி துறையின் மாவட்ட உதவி இயக்குனர் சித்ரா தலைமையிலும், அரியலூர் மாவட்டத்திற்கு, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போட்டி ஒருங்கிணைப்பாளரும், கும்பகோணம் அரசு கலை கல்லூரியின் தமிழ்த்துறை தலைவருமான காளிமுத்து தலைமையிலும் போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடுவர்களாக கல்லூரி பேராசிரியர்கள் செயல்பட்டனர். பெரம்பலூரில் நடந்த பேச்சு போட்டியில் முதலிடத்தை ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு பயிலும் காயத்ரியும், 2-ம் இடத்தை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பி.டெக் உணவு தொழில்நுட்பம் 3-ம் ஆண்டு பயிலும் யோகேசும், 3-ம் இடத்தை வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு பயிலும் பூபாலனும் பிடித்தனர். இதேபோல் அரியலூரில் நடந்த பேச்சு போட்டியில் முதலிடத்தை அரியலூர் அரசு கலை கல்லூரியில் எம்.எஸ்.சி. வேதியியல் முதலாம் ஆண்டு பயிலும் தனலெட்சுமியும், 2-ம் இடத்தை ஜெயங்கொண்டம் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு பயிலும் கனிமொழியும், 3-ம் இடத்தை வரதராஜன்பேட்டை மதர் ஞானம்மா கலை-அறிவியில் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு பயிலும் வைதிவ்யாவும் பிடித்தனர். அவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும், அந்தந்த மாவட்ட கலெக்டரால் விரைவில் வழங்கப்படவுள்ளது, என்று தமிழ் வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்