'உதயநிதி ஸ்டாலினுக்காக அமைச்சர்கள், அதிகாரிகள் மாற்றம் நடைபெறுகிறது' - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
உதயநிதி ஸ்டாலினுக்காக அமைச்சர்கள், அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுகிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக அமைச்சர்களும், அதிகாரிகளும் மாற்றம் செய்யப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"தினந்தோறும் அமைச்சரவையில் மாற்றமும், அதிகாரிகள் மாற்றமும் நடைபெறுவது நாட்டு மக்களுக்காக அல்ல. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்-அமைச்சராக்கியதால், அவருக்கு உதவியாக இருப்பதற்காக இந்த இடமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த இடமாற்றம் தொடர்ந்து கொண்டிருந்தால் விரைவில் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு இடமாற்றம் செய்யப்படுவார், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுவார். தமிழக மக்கள் தீர்ப்பு வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்."
இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.