திருமாவளவனின் மாநாடு அரசியல் நாடகம் - விஜய பிரபாகரன் குற்றச்சாட்டு

பெரியகுளத்தில் நடந்த தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் விஜய பிரபாகரன்

Update: 2024-10-03 19:31 GMT

தேனி,

தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 20-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

ரூ.100, சோறு, பீர் கொடுத்தால் தான் மற்ற கட்சிகள் நடத்துகிற கூட்டத்துக்கு கூட்டம் கூடுகிறது. ஆனால் இவை எதுவும் கொடுக்காமல், இங்கு ஏராளமான தொண்டர்கள் கூடியிருக்கின்றனர். செழிப்பாக இருந்த தேனி மாவட்டத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

'வெள்ளையனே வெளியேறு' என்று போராடி மகாத்மாகாந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். ஆனால் 'கொள்ளையனே வெளியேறு' என்று நாம் போராடி கொண்டிருக்கிறோம்.

முதல்-அமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து விட்டு வெளியே வந்தவுடன் பா.ஜனதா அரசு மைனாரிட்டி அரசு என்று கூறுகிறார். அதை பிரதமரிடம் சொல்ல அவருக்கு தைரியம் இல்லை.

கடந்த 1½ ஆண்டு காலம் சிறையில் இருந்த செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி எதற்கு?, மக்களுக்காக அவர் சிறை சென்றாரா?. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தான் செந்தில்பாலாஜி சிறைக்கு சென்றார்.

திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டை வரவேற்கிறோம். ஆனால் உங்கள் கூட்டணியில் உள்ள ஸ்டாலினிடம் ஏன் கோரிக்கை வைக்கவில்லை. இதெல்லாம் ஒரு நாடக அரசியல்.

இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து அவர், கட்சி தொண்டர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்