தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-17 10:38 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வளம்பக்குடி அருகில் இன்று (17.07.2024) காலை சுமார் 7.00 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டியைச் சேர்ந்த முத்துசாமி (வயது 60) த/பெ.சின்னையன், ராணி (வயது 37) க/பெ. முருகன், மோகனாம்பாள் (வயது 27) க/பெ. ரமேஷ் மற்றும் மீனா (வயது 26) க/பெ. கார்த்திக் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் தனலட்சுமி (வயது 36) க/பெ. செல்வராஜ் என்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில், பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா க/பெ.கவியரசன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்