முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு

அமெரிக்க பயணத்தின் வாயிலாக முதலீடுகளை ஈர்த்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்துள்ளார் .

Update: 2024-09-14 17:27 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி அமெரிக்க பயணத்தை மேற்கொண்டார். அதன்படி, சான்பிரான்ஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் நடத்தப்பட்ட சந்திப்புகளின் பலனாக ரூ.7 ஆயிரத்து 616 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். இதன் மூலம், 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலை வாய்ப்பு பெறுகிற வகையில் முதல்-அமைச்சரின் முயற்சிகள் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்திய - அமெரிக்க நாட்டு தொழில் முனைவோருக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்த்து உறவுப் பாலம் அமைத்த தமிழக முதல்-அமைச்சரை நாடே பாராட்டிக் கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சராக பதவியேற்ற 3 ஆண்டு காலத்தில் மட்டும் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சுமார் ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளும், 18 லட்சத்து 89 ஆயிரத்து 234 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க பயணத்தின் ஒவ்வொரு நாளையும் கடமை உணர்ச்சியோடு தமிழகத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற மிகுந்த ஈடுபாட்டுடன் தனது பணிகளை மனநிறைவோடு செய்து சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், அவருக்கு பெரும் துணையாக இருந்து செயல்பட்ட தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்