தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

விடுமுறைக் கால சிறப்புப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தனியார்மயத்தின் முதல்படி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2024-09-18 16:37 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விடுமுறைகள் மற்றும் திருவிழாக் காலங்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் தேவைக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காக தனியார் பேருந்துகளை பயன்படுத்த அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் நாளை இறுதி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அரசுப் போக்குவரத்துக்கழகங்களை தனியார்மயமாக்கும் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் உருவாக்கியுள்ள திட்டத்தின்படி, நெரிசல் காலங்களில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால், அதற்குத் தேவையான பேருந்துகள் அரசிடம் இல்லை என்பதால், தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்படும். அந்த பேருந்துகளை தனியார் நிறுவனத்தின் ஓட்டுனரே இயக்குவார். அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துனர் மட்டும் அதில் பணியாற்றுவார். அவ்வாறு இயக்கப்படும் பேருந்துக்கு அது பயணம் செய்யும் கி.மீ கணக்கில் வாடகைத் தொகையை போக்குவரத்துக்கழகமே செலுத்தும்.

தனியார் பேருந்துகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில், ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும், இதனால் அரசுக்கு செலவு மிச்சமாகும் என்பதால் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உண்மை நிலை வேறாக உள்ளது. மொத்த செலவு ஒப்பந்த முறையில் (Gross Cost Contract) தான் இந்தப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முதலில் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படும். அடுத்தக்கட்டமாக ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும் போது, புதிய பேருந்துகளை வாங்காமல் தனியார் பேருந்துகள் இதே முறையில் திணிக்கப்படும்.

இதே முறையில், சென்னையில் மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்காக முதல்கட்டமாக 500 பேருந்துகளை இயக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக மேலும் 500 பேருந்துகளை இயக்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையில் பேருந்துகளுக்கான நடத்துனர் மட்டும் தான் போக்குவரத்துக்கழகங்களின் சார்பில் நியமிக்கப்படுவார். ஓட்டுனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை தனியார் நிறுவனமே வழங்கும் என்பதால் அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மறைமுகமான ஆட்குறைப்பு நடவடிக்கையாகும்.

அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் போதிய பேருந்துகள் இல்லை என்பதால் தான் தனியார் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணம் மிகவும் தவறானது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8182 புதிய பேருந்துகளை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவற்றில் 1088 புதிய பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டது. அறிவித்த பேருந்துகள் அனைத்தும் வாங்கப்பட்டிருந்தால் தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதற்காகவே புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதில் தாமதம் காட்டப்படுகிறது.

மக்களுக்கு சேவை செய்வதற்கான அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளை அனுமதிக்கவே முடியாது. அதன் முதல்கட்டமாக விடுமுறைகள் மற்றும் திருவிழாக் காலங்களில் சிறப்புப் பேருந்துகளாக இயக்க தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் செய்யும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் விரோதத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்