புதிய ரெயில் பாதை திட்டம்: தமிழக அரசின் கோரிக்கையால் கைவிடப்பட்டதா..? - தெற்கு ரெயில்வே விளக்கம்
மதுரை-தூத்துக்குடி ரெயில் பாதை திட்டம், மாநில அரசின் கோரிக்கையால் கைவிடப்பட்டதாக ரெயில்வே அமைச்சர் கூறியிருந்தார்.;
சென்னை,
மதுரை - தூத்துக்குடி இடையே ரெயில்வே வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் மாநில அரசின் கோரிக்கையால், கைவிடப்பட்டதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.
இந்நிலையில் மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்டம் தொடர்பான கேள்வியை தவறாக புரிந்துகொண்டு பதிலளித்துவிட்டதால் குழப்பம் நேர்ந்திருப்பதாக தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இதுதொடர்பான விளக்கத்தில், "மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை. எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த ரெயில் திட்டத்துக்கான நில ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாகவே உள்ளது.
மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சப்தம் அதிகமாக இருந்ததால், தனுஷ்கோடி ரெயில் திட்டம் பற்றி கேட்கப்பட்டதாக நினைத்து அது தொடர்பான பதில் தரப்பட்டது. எனவே, அன்றைய தினம் ரெயில்வே மந்திரி அளித்த பதில் தனுஷ்கோடி திட்டம் பற்றியது.
அதில்தான், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னையால் தனுஷ்கோடி திட்டம் செயல்படுத்துவதில் சிக்கில் இருப்பதாக தமிழக அரசு கடிம் அனுப்பியிருந்தது. ஆனால், இந்த விளக்கத்தை மதுரை-தூத்துக்குடி பற்றிய கேள்விக்கு ரெயில்வே மந்திரி பதிலாக அளித்துவிட்டதால் குழப்பம் நேரிட்டது" என்று அதில் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.