திருச்சி: சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளை உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-01-15 15:32 IST

கோப்புப்படம்

திருச்சி,

தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல் பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதேபோல் பல்வேறு ஊர்களில் இன்று முதல் ஒரு மாத காலம் வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி அங்கு மிகவும் புகழ்பெற்றதாகும். திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பது வழக்கம் ஆகும். அதேபோல் இந்தாண்டிற்கான சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி திருவளர்சோலையை சேர்ந்த அப்பு என்பவரின் காளை காயமடைந்து உயிரிழந்தது. ஜல்லிக்கட்டில் காயமடைந்த காளைக்கு கால்நடை மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்த நிலையில் காளையின் உயிர் பிரிந்தது. 

முன்னதாக வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையும், களத்தில் இருந்து வாடிவாசலுக்குள் திடீரென நுழைந்த காளையும் முட்டிக்கொண்டதில் திருவளர்சோலை பகுதியை சேர்ந்த காளை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்