பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி.தினகரன்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது.

Update: 2024-06-29 07:05 GMT

சென்னை,

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன.

முறையான உரிமம் பெறாமலும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமலும் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதும், அங்கு பணியாற்றும் அப்பாவி தொழிலாளர்கள் தங்களின் உயிர்களை பறிகொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

பட்டாசு ஆலைகளில் ஒவ்வொரு முறை நிகழும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் போது விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், நிவாரண உதவி வழங்குவதோடு தன் கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் தி.மு.க அரசின் மெத்தனப் போக்கே அடுத்தடுத்து விபத்துகள் நடைபெறுவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அனைத்து பாதுகாப்பு விதிகளும் முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இனிவரும் காலங்களில் பட்டாசு ஆலை விபத்துகளை முற்றிலுமாக தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்