மாணவர்களை பன்முகத்தன்மை உடையவர்களாக உருவாக்க கல்லூரிகள் திட்டமிட வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மாணவர்களை பன்முகத்தன்மை உடையவர்களாக உருவாக்க கல்லூரிகள் திட்டமிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-06-26 21:56 GMT

முப்பெரும் விழா

ஜமால்முகமது கல்லூரி நிறுவனர் நாள் விழா, கல்லூரி வரலாற்றை தொகுக்கும் பெருந்திட்ட தொடக்க விழா, குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி ஜமால்முகமது கல்லூரி ஆடிட்டோரியத்தில் நேற்று காலை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எஸ்.இஸ்மாயில் முகைதீன் தலைமை தாங்கினார்.

கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் எம்.ஜே.ஜமால்முகம்மதுபிலால், செயலாளர் அ.கா.காஜாநஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால்முகம்மது, கல்லூரி நிர்வாகக்குழு உதவி செயலாளர் க.அப்துஸ்சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

இந்த விழாவில் நேரில் பங்கேற்க விரும்பினாலும் காய்ச்சலின் அவதி காரணமாக சற்று வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஒருவார காலம் வெளியூர் பயணத்தை தவிர்க்க அறிவுரை கூறினார்கள். என்னதான் நான் மாநில முதல்-அமைச்சர் ஆனாலும் மருத்துவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அதனால்தான் திருச்சிக்கு வர இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விழாவில் என்னை பங்கெடுக்க வைக்க அமைச்சர் கே.என்.நேரு, பேராசிரியர் காதர்மொய்தீன் இருவருமே அதிக அக்கறை காட்டினார்கள். திருச்சி என்பதற்காக மட்டும் அவர்கள் அக்கறை காட்டவில்லை. அதையும் தாண்டிய பாசம் என்ன என்பதை நான் பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.

2 அமைச்சர்களை தந்த கல்லூரி

பேராசிரியர் காதர்மொய்தீனும், நேருவும் இந்த கல்லூரியில் தான் படித்தவர்கள். அதுமட்டுமல்ல, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் இதே கல்லூரியில் தான் படித்தார். ஆக 2 அமைச்சர்களை தமிழ்நாட்டுக்கு இந்த கல்லூரி கொடுத்துள்ளது. திருச்சியின் அடையாளங்களில் ஒன்று ஜமால்முகமது கல்லூரி. தீரர்களின் கோட்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி மாவட்டம்.அங்கு பல்வேறு கல்வி கோட்டங்கள் உள்ளன. அதில் தலைசிறந்த கல்வி கோட்டம்தான் இந்த கல்லூரி. ஜமால்முகமது, காஜாமியான் ராவுத்தர் ஆகியோர் இந்த கல்லூரியின் நிறுவனர்கள். 1931-ம் ஆண்டு மகாத்மாகாந்தி 2-வது வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்றபோது அவருடன் சென்றவர் ஜமால்முகமது. இவர் இந்தியாவின் விடுதலை போராட்டத்துக்காக மகாத்மா காந்தியிடம் தொகை நிரப்பப்படாத காசோலையை வழங்கியவர்.

கலைத்திறமைக்கு முக்கியத்துவம்

காஜாமியான் ராவுத்தரும் தேசியத்தின் அடையாளமாக கதர் துணியை தயாரிக்க திருச்சியில் கதர்ஆலையை நிறுவியர். தங்களது ஆலையில் தயாரித்த கதர் துணிகளை அவர் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினார். தந்தை பெரியாருடன் நெருக் கமான தொடர்பில் இருந்தவர் காஜாமியான் ராவுத்தார். பெரும் பணக்காரர்களான இவர்கள் இருவரும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வியை கொடுக்க நினைத்து இந்த கல்லூரியை தொடங்கினார்கள். இரு நல்லவர்கள் சேர்ந்தால் எத்தனை பேருக்கு அறிவொளி கொடுக்க முடியும் என்பதற்கு இந்த கல்லூரியே சான்று.

ஏதோ கல்லூரி நடத்துகிறோம் என்று இல்லாமல் தரமான கல்வி நிறுவனமாக நடத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர். சிறுபான்மை கல்வி நிறுவனமாக இருந்தாலும் அனைவரும் பயிலும் கல்வி நிறுவனமாக உள்ளது. கலைத்திறமைக்கு முக்கியத்துவம் தரும் கல்லூரியாகவும் இது அமைந்துள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்த கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் தொடர்ந்து 16 ஆண்டுகளாக அணிவகுத்து வருகிறார்கள். இங்கு அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

உயர்கல்வி ஆராய்ச்சியில் பொற்காலம்

கல்வி, படிப்பு, பட்டம் ஆகியவற்றை தாண்டி தனித்திறமைகளும், பல்துறை அறிவாற்றலும் உள்ள மாணவர்களால் தான் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட முடியும். அந்தவகையில் தான் நான் முதல்வன் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இது எனது கனவு திட்டம். அதனால் தான் மார்ச் 1-ந் தேதி எனது பிறந்த நாளில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினோம்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பள்ளி கல்வியில் காமராஜர் ஆட்சி காலமும், கல்லூரி கல்வியில் கலைஞர் ஆட்சி காலமும் பொற்காலமாக இருந்ததைப்போல், இந்த ஆட்சி காலம் உயர்கல்வியின் ஆராய்ச்சியில் பொற்காலமாக இருக்க வேண்டும் என்ற இலக்கோடு செயலாற்றி வருகிறோம். இந்த பயணத்தில் ஜமால்முகமது போன்ற தனியார் கல்வி நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும்.

பன்முகத்தன்மை கொண்ட மாணவர்கள்

கல்லூரியில் சேரும் மாணவர்களை பட்டதாரிகளாக மட்டுமல்ல, அறிவு கூர்மை கொண்டவர்களாகவும், பன்முக தன்மை கொண்டவர்களாகவும் உருவாக்க திட்டமிட வேண்டும். ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் உலகின் 19 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த முன்னாள் மாணவர் சங்கத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்வதை அறியும்போது, கல்வியுடன், மனிதாபிமானத்தையும் இங்கு வளர்ப்பதை பார்க்க முடிகிறது. இத்தகைய சிறப்புமிக்க கல்லூரி முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு எனது வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் கல்லூரிக்கு வருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடைசி பெஞ்ச் மாணவன்

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, சமீபத்தில் டான் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படத்தில் வருவதுபோல் நானும் கடைசி பெஞ்ச் மாணவன் தான். நன்றாக படிக்காததால் நிறைய அவமானப்பட்டிருக்கிறேன். தலைவர் கருணாநிதி எல்லோரிடமும் முரசொலி படிச்சியானு கேட்பார். ஆனால் என்னிடம் கேட்கமாட்டார்.

யாரிடம் எந்த பணியை ஒப்படைக்க வேண்டும் என்பது தலைவர் கருணாநிதிக்கு நன்றாக தெரியும். ஜமால் முகமது கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதெல்லாம் நான் வெற்றி பெற்றுவிடுவேன். நான் படித்து சான்றிதழ் வாங்க முடியாவிட்டாலும், தேர்தலில் வெற்றி பெற்று இந்த கல்லூரியில் சான்றிதழ் வாங்கி விட்டேன் என்று பேசினார்.

புதிய கல்விக் கொள்கை

அமைச்சர் பொன்முடி பேசுகையில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கர்நாடகாவில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அதை நுழையவிடாமல் தடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மனிதாபிமானம் அனைத்து தரப்பினரிடமும் வளர வேண்டும் என்று முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார். அதுதான் திராவிட மாடல். இப்போது அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி உள்ளார்.

அதேபோல் முதல் தலைமுறை மாணவர்கள் படிக்க வழிவகை செய்தவர் தலைவர் கருணாநிதி. இப்போது புதிய கல்வி கொள்கையில் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு கொண்டு வருவேன் என்கிறார்கள். அப்படி வந்தால் பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாகும். புதிய கல்வி கொள்கையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கடமை மாணவர்களாகிய உங்களுக்கு இருக்கிறது. வருங்காலத்தில் மாநில கல்வி கொள்கை உருவாக்க முதல்-அமைச்சர் நியமித்து இருக்கிற குழுவின் திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பேசினார்.

உயர்கல்வியில்...

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், மத்திய அரசு ஒரு அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. 2035-ம் ஆண்டு உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 50 சதவீதத்தை தாண்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் இந்த இலக்கை நாம் எப்போதோ எட்டிவிட்டோம். இந்த கல்லூரி முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக்காக வருடந்தோறும் ரூ.70 லட்சம் வழங்குகிறார்கள் என்பது பெருமையான விஷயம் என்றார்.

விழாவில் கவுரவ இயக்குனர் மற்றும் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் அப்துல்காதர் நிகால், கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் அ.முகம்மது இப்ராகிம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்