சிறை கைதிகளுக்கு தானமாக புத்தகம் வழங்கும் விழா

திருவாரூர் புதிய பஸ்நிலையம் அருகே சிறை கைதிகளுக்கு தானமாக புத்தகம் வழங்கும் விழா நடந்தது. இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. புத்தகம் வழங்கினார்.

Update: 2023-03-26 18:45 GMT

கொரடாச்சேரி:

திருவாரூர் புதிய பஸ்நிலையம் அருகே சிறை கைதிகளுக்கு தானமாக புத்தகம் வழங்கும் விழா நடந்தது. இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. புத்தகம் வழங்கினார்.

புத்தக திருவிழா

திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே வருகிற 2-ந்தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது. விழாவில் இலக்கியம், மாணவ-மாணிவிகளுக்கு தேவையான புத்தகங்கள், காவியங்கள், இதிகாசங்கள், வரலாற்று படைப்புகள், கதைகள், சிறு குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அரசு சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிறையில் உள்ள கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் வகையில் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

மனம்திருந்தி மறுவாழ்வு வாழ...

முதல் நாளில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தையும், மாவட்ட கலெக்ட்ர் சாருஸ்ரீ பொன்னியின் செல்வன் 5 தொகுப்புகளும், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னாள் முதல்-அமைச்சர் எழுதிய குரலோவியம் என்ற புத்தகத்தையும், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா நட்பு எனும் வானம் என்ற புத்தகத்தையும் வழங்கினர்.

மேலும் பொதுமக்கள் பலரும் தங்களால் இயன்ற புத்தகங்களை சிறைக்கு தானமாக வழங்கி வருகின்றனர். சிறைவாசிகள் தாங்கள் செய்யும் குற்ற செயல்களில் இருந்து மனம் திருந்தி மறுவாழ்வு வாழ அவர்கள் புத்தகம் படிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதனை ஊக்குவிக்கும் வகையில் புத்தகங்களை வழங்கலாம் என்று புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்