வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது: தேர்தல் ஆணையம்
சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.;
சென்னை,
வாக்காளர்களிடம் எந்த தகவலையும் தெரிவிக்காமல், வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான பெயர்களை, தேர்தல் ஆணையம் தன்னிச்சயைாக நீக்கியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தநிலையில், ஆர்.எஸ்.பாரதியின் புகாருக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். அதில்,
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது. சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது. முகவரி மாற்றம், மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே பெயர்கள் நீக்கப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 2 வார காலம் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது. வீடுகளில் வாக்காளர்கள் இல்லாமல் இருப்பது, ஒவ்வொரு முறையும் வாக்குச்சாவடி அலுவலர்களால் உறுதி செய்யப்படுகிறது. முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவலர்களின் கள ஆய்வின் போது கண்டறியப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.