கோடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கு - ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் 27-ந்தேதி இறுதி வாதம் நடைபெறுகிறது.

Update: 2024-09-09 19:55 GMT

கோப்புப்படம்

சென்னை,

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கின் விசாரணையை சென்னை ஐகோர்ட்டு வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கோடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில், தேடப்பட்டு வந்த கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் மர்மமான முறையில் பலியானார். இதையடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, பத்திரிகையாளர்களுக்கு கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டி அளித்தார்.

இதையடுத்து, இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக மான நஷ்ட ஈடாக ரூ.1 கோடியே 10 லட்சம் தனபால் தரவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராக முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதால், வக்கீல் கமிஷனர் மூலம் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. எதிர்மனுதாரர் தனபால் சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந்தேதி முதல் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. தனபாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் சாட்சி விசாரணை முடிந்து விட்டது என்று கூறியதால், இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்