தேசத்திற்கான வாஜ்பாயின் பங்களிப்பு மறக்க முடியாதது: அண்ணாமலை புகழாரம்

தேசத்திற்கான வாஜ்பாயின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது என்று அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.

Update: 2024-12-25 03:18 GMT

சென்னை,

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

பாரதத்தின் முன்னாள் பிரதமரும், பா.ஜனதா நிறுவனர்களில் ஒருவருமான பாரத ரத்னா, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களது பிறந்த நூற்றாண்டு தினம் இன்று. மிகச் சிறந்த பேச்சாளரும், கவிஞருமான வாஜ்பாய் அவர்கள், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.

பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளிலும் திறம்படப் பணியாற்றியவர். நமது பாரதத்தை அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர். கார்கில் போரில் எதிரிகளைத் தோற்கடித்து, நம் நாட்டின் வலிமையை வெளிப்படுத்தியவர்.

சமத்துவம், சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர். அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை இன்றும் வழி நடத்துகிறது. தேசத்திற்கான அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. தேசத்தின் மீது கொண்ட அன்பால், நாட்டிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளைக் கருத்தில் கொண்டு, வாஜ்பாய் பிறந்த தினம், கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடியால், தேசிய நல்லாட்சி தினமாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. வாஜ்பாய் புகழைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்