பேனா நினைவு சின்னம்: ஆய்வுகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பேனா நினைவு சின்னம் தொடர்பான உரிய ஆய்வுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தமிழ் இலக்கிய பங்களிப்பை போற்றும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.80 கோடியில், 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில், 30 மீட்டர் உயரம், 3 மீட்டர் விட்டமும் கொண்ட பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக மெரினா கடற்கரையில் இருந்து தரை பரப்பில் 290 மீட்டர், கடலில் 360 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது. பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதி அளித்துள்ளது.
பேனா நினைவு சின்னம் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் வருகிறது. ஆமை முட்டையிடும் பகுதியாகவும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அங்கு எந்த கட்டுமானங்களை எழுப்பினாலும், அது விதிமீறலாகும். எனவே இத்திட்டத்துக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் கீழ் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். நினைவு சின்னம் அமைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த கு.பாரதி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் ஏற்படும் கடல் அரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் ஒரு திட்டத்தை செயல்படுத்துபவரிடமே அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சொன்னால் வெளிப்படைத் தன்மையுடன் நியாயமான ஆய்வு நடைபெறுமா?. ஒருவேளை பாதிப்பு கண்டறியப்பட்டால் அதற்குள் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டிருந்தால், அப்போது என்ன மத்திய அரசு என்ன செய்யும்?.
இனி ஒரு திட்டத்துக்கு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருந்தால், அதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே மேற்கொண்டு, அதற்கான செலவை, திட்டத்தை செயல்படுத்த விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இத்திட்ட அனுமதியில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகளின்படி, உரிய ஆய்வுகளை தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் அக்டோபர் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.