அண்ணா பல்கலை. சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது

சென்னையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2025-01-08 13:06 IST

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அளித்துள்ள பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. குழுவின் பரிந்துரை அடிப்படையில் போலீசார் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மெரினா கடற்கரையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தலைமை செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியாக செல்ல முயன்றனர் . தொடர்ந்து பாஜகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இந்த நிலையில் பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கணடனம் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில், திமுக அரசின் மந்தமான போக்கைக் கண்டித்தும், வழக்கு விசாரணையை நேர்மையான முறையில் நடத்தக் கோரியும், குற்றவாளி குறிப்பிட்ட இன்னொரு நபர் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், தமிழக பாஜக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா உள்ளிட்ட நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்துள்ளது. வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில் ஆரம்பக் கட்டத்திலிருந்தே ஈடுபட்டு வரும் திமுக அரசு, நேர்மையான விசாரணை கோரும் குரல்களை ஒடுக்குவது, அப்பட்டமான ஜனநாயக மீறல் ஆகும். குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில், மேலும் மேலும் தவறுகளை இழைத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. உடனடியாக, கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்