வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதற்கு எதிர்ப்பு: என்.எல்.சி. நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம்- அன்புமணி ராமதாஸ்
வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மறுக்கும் என்.எல்.சி. நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம் என்று நெய்வேலியில் பா.ம.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.
மாட்டுவண்டியில் வந்த அன்புமணி
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்தும், நிலத்தடி நீரை உறிஞ்சி கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்குவதை கண்டித்தும் பா.ம.க. சார்பில் நேற்று நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சண்.முத்துகிருஷ்ணன், செல்வ.மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். முன்னதாக அவர் மாட்டு வண்டியில் ஆள் உயர பூட்டுடன், மேடைக்கு வந்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
46 கிராமங்களை அழித்து விட்டது
என்.எல்.சி. நிறுவனத்தை பூட்டுவதற்கு பூட்டு எடுத்து வந்துள்ளேன். இந்த பூட்டு அடையாள பூட்டு. இது என்.எல்.சி.க்கு எச்சரிக்கை. அடுத்து உண்மையாக பூட்டி விடுவோம்.
என்.எல்.சி. நிறுவனத்தால் நாம் அன்றாட வாழ்வை இழந்துவிட்டோம். 1956-ல் ஒரு சில லட்சம் ரூபாயில் என்.எல்.சி. நிறுவனத்தை தொடங்கி, 46 கிராம மக்களை அடியோடு அழித்து விட்டார்கள். இதுவரை 37,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளார்கள்.
அப்போது நிலம் கொடுத்தால் வேலை கொடுப்போம். வீடு கட்டி கொடுப்போம் என பொய் வாக்குறுதி அளித்துள்ளனர். அதனால் 66 ஆண்டாக ஏமாற்றி வரும் என்.எல்.சி. நிறுவனம் நமக்கு தேவையா?. என்.எல்.சி. நிறுவனத்தால் நிச்சயம் வளர்ச்சி கிடையாது. எனவே ஒரு பிடி மண்ணை கூட கொடுக்க மாட்டோம்.
விவசாயிகளுக்கு துரோகம்
என்.எல்.சி. நிறுவனத்தால் ஆயிரம் அடிக்கு கீழே நிலத்தடி நீர்மட்டம் சென்று விட்டது. இது விவசாயிகளுக்கு செய்த மாபெரும் துரோகம். இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். ஒப்பந்த பணிகள் கேட்டு அந்த நிறுவனத்திடம் சென்று கையேந்தி கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு ஒன்றும், தேர்தலுக்கு பின்பு ஒன்றும் பேசுகிறார்கள். தேர்தலில் ஜெயித்தவுடன் இப்பகுதி மக்களுக்காக அவர்கள் போராடவில்லை.
பாழாகும் மண்
அதனால் நீங்கள் ராணுவத்தையே கூட்டி வந்தாலும், தொடர்ந்து மக்களுக்கு துரோகம் செய்து வரும் இந்த நிறுவனத்திற்கு நாங்கள் பூட்டு போடுவோம். ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்தை விட, பத்து மடங்கு இந்த மண்ணை என்.எல்.சி. பாழாக்கியுள்ளது.
இந்த மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும், தண்ணீரையும் காப்பது எனது கடமை. அதனால் இந்த மாவட்டத்தில் உள்ள எட்டப்பர்களே ஒதுங்கி செல்லுங்கள். உங்கள் துரோகத்தை நான் வெளிப்படையாக பேசுவேன்.
எச்சரிக்கை
என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டுக்கும், கடலூருக்கும் ஆபத்து. அதனால் தான் இந்த நிறுவனத்தை இன்று நான் பூட்டுவேன். ஆனால் முதலில் நோட்டீஸ் கொடுப்பது போல எச்சரிக்கை விடுக்கிறேன். மேலும் தமிழக அரசு என்.எல்.சி. நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
சமீபத்தில் 299 என்ஜினீயர்கள் பணிக்கு எடுத்தார்கள். இதில் ஒருவர் கூட தமிழர்கள் கிடையாது. அதனால் இந்த நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை.
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. ஆனால் சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும் மண்ணையும் மண்ணின் மைந்தர்களையும் புறக்கணித்து எங்களுக்கு வளர்ச்சி வேண்டாம்.
விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் எந்த திட்டமும், அது எட்டு வழி சாலையாக இருந்தாலும், விமான விரிவாக்க பணியாக இருந்தாலும் எங்களுக்கு தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.