26-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Update: 2024-12-26 03:41 GMT


Live Updates
2024-12-26 15:19 GMT

அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் மவுயி விமான நிலையத்திற்கு வந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் லேண்டிங் கியர் இடைவெளியில் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் யார்? அவர் எப்படி அந்த பகுதிக்கு சென்றார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

2024-12-26 14:44 GMT

சிரியாவில் மோதல்: கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழப்பு

சிரியாவில் ஆட்சியை கைப்பற்றி உள்ள கிளர்ச்சியாளர்களுக்கும், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முந்திய அரசாங்கத்தின் (ஆசாத் அரசாங்கம்) ஒரு அதிகாரியை கைது செய்ய முயன்றபோது கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

2024-12-26 14:15 GMT

மாணவி பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக உறுப்பினரே இல்லை என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவர் திமுகவின் பகுதி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளதற்கான திமுக நோட்டீஸ், முரசொலி நாளேடு செய்தி உட்பட பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.

இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் வலுக்கிறது. எனவே இனி இந்த வழக்கை திமுக அரசின் காவல்துறை விசாரிப்பதற்கு தார்மீகத் தகுதியில்லை. எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

2024-12-26 13:31 GMT

எப்.ஐ.ஆர். வெளியிட்டவர் மீது நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த மாணவியின் விவரங்கள் அடங்கிய எப்.ஐ.ஆர். பகிரங்கமாக வெளியானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்). தொழில்நுட்ப ரீதியாக இதுபோன்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர். பதிவானதும் லாக் ஆகிவிடும். இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். லாக் ஆவதில் தாமதம் ஆனது.

எப்.ஐ.ஆரை வெளியிடுவது மிகப்பெரிய குற்றம். வெளியிட்டவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

2024-12-26 13:13 GMT

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் மேலும் 60 பேருக்கு ராணுவ கோர்ட்டுகள் தண்டனை வழங்கி உள்ளன. அவர்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

2024-12-26 12:34 GMT

நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 64.64 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியதாகவும், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆண் வாக்காளர்களின் 65.55 சதவீதம் பேரும், பெண் வாக்காளர்களில் 65.78 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

2024-12-26 12:16 GMT

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பரிகாரம் தேடவே அண்ணாமலை விரதம் இருக்கிறார் என அமைச்சர் சேகர் பாபு கூறி உள்ளார்.

2024-12-26 12:08 GMT

ராணுவ உயர் அதிகாரிகளை கொல்ல சதி.. ரஷியாவில் 4 பேர் கைது

உக்ரைன் அரசின் உத்தரவின்பேரில் ரஷியாவில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ரஷிய பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரஷிய ராணுவத்தின் உயர் தளபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மூத்த ராணுவ அதிகாரிகளை கொல்ல உக்ரைன் சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

2024-12-26 11:23 GMT

மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு முழுமையான பாதுகாப்பும் மருத்துவ சிகிச்சையும் செய்து கொடுக்கும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

2024-12-26 11:08 GMT

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். லண்டன் சென்று வந்தபிறகு அவருக்கு என்ன ஆனது என் தெரியவில்லை. தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டம் தேவையற்றது. இந்த போராட்டம் நகைப்புக்குரியதாக மாறிவிடக்கூடாது - திருமாவளவன் பேட்டி

Tags:    

மேலும் செய்திகள்