'லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை' - திருமாவளவன்

பா.ஜ.க.தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு அண்ணாமலை பெரிதும் முயற்சிக்கிறார் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

Update: 2024-12-26 12:24 GMT

கோவை,

கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பான அரசியலை செய்ய விரும்புகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி அல்ல, பா.ஜ.க.தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு பெரிதும் முயற்சிக்கிறார். ஆளுங்கட்சியின் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளை அடுக்கினால்தான் தன்னை எதிர்க்கட்சி தலைவராக காட்டிக்கொள்ள முடியும் என்று அவர் நம்புவதாக தெரிகிறது.

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்று சொல்லி அதற்கு தி.மு.க. பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான ஆதாய அரசியல். அந்த நபர் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் தி.மு.க. அரசை குற்றம்சாட்டலாம். ஆனால் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள சூழலில், இவ்வாறு அரசின் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல.

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டம் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மகாத்மா காந்தியைப் போல் அண்ணாமலை தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அகிம்சாவழி போராட்டத்தை கையில் எடுக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் காந்தியடிகள் கூட இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவித்தது இல்லை.

பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளியாகி இருக்கக் கூடாது. அது மிகவும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்