பெண் ஏட்டுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு ரத்து - ஐகோர்ட்டு தீர்ப்பு

பெண் ஏட்டுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2024-12-26 23:39 GMT

கோப்புப்படம் 

சென்னை,

திருச்சி பேருந்து நிலையத்தில் கடந்த 2012-ம் ஆண்டு பிரபு என்பவர் அமர்ந்து கொண்டு அங்கு வந்து செல்லும் பெண்ளை பாட்டு பாடி கேலி செய்ததாக திருச்சி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஸ்டேஷன் ஜாமீனில் அவரை விடுவித்தனர்.

மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபு, பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருந்தபோது, பெண் போலீசார் விசாரித்தனர். உட்கார்ந்து கொண்டே பதில் அளித்ததால், என்னை அடித்து உதைத்தனர். அவர்களுடன் மேலும் 4 ஆண் போலீசாரும் சேர்ந்து கொண்டு என்னை தாக்கினர் என்று மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், திருச்சி பெண் ஏட்டு ஹேமலதா மனித உரிமையை மீறியதாக கூறி ரூ.30 ஆயிரத்தை இழப்பீடாக பிரபுக்கு வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஏட்டு ஹேமலதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர், கே.ராஜசேகர் ஆகியோர், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தனர்.

அந்த உத்தரவில், "பிரபு உடலில் போலீசார் தாக்கியதால் காயம் எதுவும் ஏற்பட்டதாக இல்லை. அதனால், அவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்