20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று - நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி
தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.
சென்னை,
26-12-2004 இந்த நாளை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. வான் உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் வாரிச்சுருட்டிச் சென்ற உயிர்கள், சொத்துகளின் எண்ணிக்கையை சொல்லி மாளாது. பலர் தங்களது உறவுகளை இழந்து மாறாத சோகத்துடன் இன்றும் கண்ணீருடன் வாழ்கிறார்கள்.
தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. எத்தனை ஆண்டுகளானாலும் சுனாமி தந்த வடு மாறாது. தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுனாமிக்கு பலியானார்கள். காவிரி டெல்டாவின் கடைகோடி மாவட்டமான நாகையில் மட்டுமே 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர்.
இந்தநிலையில் சுனாமி தாக்குதலின் 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த துயர நாளில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர கிராம மக்கள், பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கடலில் பால் ஊற்றியும் பூக்களைத் தூவியும் கடல் பேரலைகள் காவு கொண்ட உறவுகளுக்காக நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ மணக்குடி கிராமத்தில் சுனாமியில் சிக்கி உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடலூரில் 20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றி உயிரிழந்தவர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு நாளையொட்டி, நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. வேதாரண்யம் வட்டத்தில் 15 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்வில்லை. அதேபோல தூத்துக்குடியில் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.