மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; கைதானவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-12-26 02:22 GMT

சென்னை,

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக உணவு வசதியுடன் கூடிய தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதிராஜா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தார்.அதே நேரம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவரை 3 தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அங்கு தற்போது கட்டிட வேலை நடந்து வருகிறது. அதில் ஈடுபட்ட பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தீவிர விசாரணைக்கு பின்னர், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர் யார் என்பது அடையானம் தெரிந்தது. அவரது பெயர் ஞானசேகரன் (வயது 37) என்பதும், அவர் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. நேற்று மாலை ஞானசேகரனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் (ஜனவரி 8-ம் தேதி வரை) நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே தப்பியோட முயற்சித்தபோது ஞானசேகரனுக்கு இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. சிகிச்சை முடிந்தபிறகு ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்