விடுமுறை தினம்: வண்டலூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வண்டலூர் பூங்காவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் குவிந்தனர்.
சென்னை,
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 1700-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.
நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளை பார்த்து ரசித்து குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டது.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து பூங்காவை சுற்றி பார்த்தனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.