அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை - எப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

Update: 2024-12-26 04:02 GMT

சென்னை,

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

இதையடுத்து இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் (ஜனவரி 8-ம் தேதி வரை) நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பு எற்படுத்தி உள்ளது. அதில், "நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தர வைப்பேன் என மிரட்டினான். செல்போனில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக்கொண்டு அவருக்கு வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான்.

நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை; தொடர்ந்து மிரட்டினான். அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தான்" என்று கூறியதாக எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்