2026 தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2024-06-13 17:30 GMT

கோவை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலைவிட, இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் திமுகவிற்கு கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஊடகங்கள் அ.தி.மு.க.விற்க்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது. திமுகவில் அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்தனர்.

பாஜகவில் பலமுறை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். மேலும் அந்த கட்சியின் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் பிரச்சாரம் செய்தனர். இதற்கு மத்தியிலும் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் இது சட்டமன்ற தேர்தல் அல்ல. மத்தியில் யார் வர வேண்டும் என்கிற தேர்தல். 2026 தேர்தலில் அதிமுக அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும்.

அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்றவர்களால்தான் ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது. பிரிந்து சென்றவர்களால் அ.தி.மு.க.விற்கு எந்த இழப்பும் கிடையாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படும்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்