இன்று தொடங்கும் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

மத்திய அரசுக்கு எதிராக தொழிற் சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

Update: 2022-03-27 23:12 GMT
சென்னை,

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

2 நாள் வேலைநிறுத்தம்

குறிப்பாக தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார்மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

20 கோடி தொழிலாளர்கள்

இந்த அழைப்பை ஏற்று பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன.

நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைதொடர்பு, தபால், வருமான வரித்துறை, செம்புத்துறை, வங்கிகள், மின்சாரம், காப்பீடு என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகள் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.

நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் 30-ந் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கி சேவை பாதிக்கும்

இந்த போராட்டத்தில் பங்கேற்க போவதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை கைவிட்டு அவற்றை வலுப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. அத்துடன் வாராக்கடன்களை விரைவில் வசூலித்தல், முதலீட்டு வட்டிவிகிதம் அதிகரிப்பு, சேவை கட்டண குறைப்பு, ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் வைத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

இந்த போராட்டத்தால் வங்கித்துறை, போக்குவரத்து, ரெயில்வே மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய துறைகளின் சேவைகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதில் முக்கியமாக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கக்கூடும் என பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி போன்றவை தெரிவித்து உள்ளன.

இதைப்போல தனியார் வங்கிகளும் வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர் சேவை பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளன.

மத்திய அரசு அறிவுறுத்தல்

அதேநேரம் இந்த வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் மாநிலங்களும் இந்த போராட்டத்தை முறியடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.

குறிப்பாக மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சார வசதி தடையின்றி கிடைக்க ஆவன செய்யுமாறு மத்திய மின்சார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநிலங்கள், மத்திய மின்சார ஆணையம், தேசிய தொகுப்பு வினியோக மையம் உள்ளிட்டவற்றுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது.

24 மணி நேரமும் மின்சாரம்

அதில் அரசு கூறுகையில், ‘24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அனைத்து மின்வாரியங்களும் எடுக்க வேண்டும். அனைத்து மின்நிலையங்கள், வினியோக பாதைகள் மற்றும் துணை மின்நிலையங்கள் அனைத்தும் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தி உள்ளது.

28 மற்றும் 29-ந் தேதிகளில் மின்தடைக்கு திட்டமிடப்பட்டு இருந்தால், அதை முடிந்த அளவு அடுத்து வருகிற நாட்களுக்கு தகுந்த முறையில் மாற்றியமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆஸ்பத்திரி, ரெயில்வே, ராணுவம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எஸ்மா சட்டம் பாயும்

இந்த வேலை நிறுத்தத்துக்கு அரியானா, சண்டிகார் உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்து உள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் அரசுகளின் இந்த எச்சரிக்கையையும் மீறி வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்யப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவற்றுக்கும் திட்டமிட்டு உள்ளனர். இதனால் நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

தி.மு.க. ஆதரவு

தமிழகத்தில், இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனாலும், போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலம் முழுவதும் இன்று பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனியார் ஆம்னி பஸ்களும் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படதாக வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். சென்னையில் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது. வடசென்னை பகுதியில் மட்டும் 9 இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக தபால் நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய சென்னை மற்றும் தென்சென்னையில் தலா ஒரு இடத்திலும் போராட்டம் நடைபெற இருக்கிறது.

ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

மத்திய சென்னை தொழிற்சங்க நிர்வாகிகள், சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பும், தென்சென்னை நிர்வாகிகள் கிண்டி பஸ் நிலையம் அருகேயுள்ள தபால் நிலையம் முன்பும் போராட்டம் நடத்துகிறார்கள்.

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் தலா 5 இடங்களில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது.

பொது வேலை நிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்