மதுரை-சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

மதுரை-சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில், இரண்டு சிங்கப்பூர் போர் விமானங்கள், பாதுகாப்புக்காக அந்த விமானத்துடன் சென்றன.

Update: 2024-10-15 18:04 GMT

சிங்கப்பூர்,

தமிழகத்தின் மதுரையில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற ஏ.எக்ஸ்.பி.684 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது என தகவல் வெளியானது.

இதுபற்றி சிங்கப்பூர் பாதுகாப்பு துறை மந்திரி எங் ஹென் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இ-மெயில் வழியே இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. இதனால், எங்களுடைய விமான படையை சேர்ந்த எப்-15எஸ்.ஜி. போர் விமானங்கள் இரண்டு, பாதுகாப்புக்காக அந்த விமானத்துடன் சென்றன.

அந்த விமானம் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக இன்றிரவு 10.04 மணியளவில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் விமான பாதுகாப்பு சாதனங்கள் செயலில் வைக்கப்பட்டன. விமானம், தரையிறங்கியதும் அது விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இதற்காக சிங்கப்பூர் ஆயுத படைகளுக்கு தன்னுடைய நன்றியையும் அவர் தெரிவித்து கொண்டார்.

இந்த விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் பற்றி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் சார்பில் உடனடியாக எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்