லஞ்சம் தலைவிரித்தாடும் சென்னை மாநகராட்சி - சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி

சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள நீதிபதி, மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-08-14 11:03 GMT
சென்னை,

சென்னை ஷெனாய் நகரில் மாநகராட்சியின் நிலம் ஆக்ரமிக்கப்பட்டதாக லட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்  நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜரானார். சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகள் குறித்து ஐகோர்ட்டில்  பட்டியலிட்டார்.

அப்போது பேசிய நீதிபதி, சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது என்று கூறினார். 

மேலும், சட்டவிரோத ஆக்ரமிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சியிடம் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆக்ரமிப்புகளைத் தடுக்க கடும் நடவடிக்கைள் எடுக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் இருக்கும் ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்புக் குழுவின் பணி என்ன?  

மாநகராட்சிக்குள்ளும் மாநகராட்சிப் பகுதிக்கு உள்ளேயும் லஞ்சத்தை ஒழிக்க எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் சொத்து வரி நிலுவையை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மக்களுக்கான பணிகளை செய்வதற்காக லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஊழல் தொடர்பான புகார்கள் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சி எல்லைக்குள் விதிகளுக்கு உட்பட்டு கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படுகிறதா? மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். 

மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய எஸ்.எம். சுப்ரமணியம், வழக்கு விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்