இளம் என்ஜினீயர் கைவண்ணத்தில்... எலெக்ட்ரிக் வண்டிகளாக மாறும் பழைய வண்டிகள்

பழைய இரு சக்கர வாகனத்தை மின்சார வாகனமாக இரண்டே நாட்களில் மாற்றித்தருகிறார் ஐதராபாத்தை சேர்ந்த 23 வயது என்ஜினீயர் மாஜ் அகமது கான்.

Update: 2022-10-07 15:52 GMT

பொறியியல் இறுதியாண்டில் மின்சார வாகனம் குறித்த பாடத்தைப் படித்த பிறகு, மின்சார வாகனம் குறித்த ஆர்வம் கானுக்கு அதிகரித்துள்ளது. அது பற்றி சிந்தித்தவர் புதிய வடிவமைப்புடன் மின்சார வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதில் வெற்றியும் கண்டார்.

இது குறித்து கான், "இரும்புக்கழிவுகளாக ஒதுக்கப்படும் இரு சக்கர பெட்ரோல் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம். அதன்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழைய வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற முடிவு செய்தேன். கடந்த ஆண்டு ரூ.60 ஆயிரம் செலவழித்து பழைய பெட்ரோல் ஸ்கூட்டரை மின்சார வாகனமாக மாற்றினேன். எனது இந்த முயற்சி இணையம் வழியே பிரபலமானது. அப்போது கூட மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நேரம் தேவைப்பட்டது.

எனினும், சில மாதங்களில் வாடிக்கையாளர்களைப் பெற்றேன். தங்கள் பழைய வாகனங்களை அப்புறப்படுத்த விரும்பாத அவர்கள், அவற்றை மின்சார வாகனமாக மாற்ற விரும்பினர். இதுவரை 7 பழைய மோட்டார் பைக்குகளை மின்சார வாகனங்களாக மாற்றியுள்ளேன்.

15 பைக்குகளுக்கு ஆர்டர் கிடைத்திருக்கிறது. இதுதவிர, என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மின்சார வாகனம் குறித்த பிராஜக்ட் பணிக்கு உதவுகிறேன்.

பசுமையான எதிர்காலத்துக்காக இரு சக்கர வாகனத்தை மின்சார வாகனமாக மாற்ற வெறும் 5 முதல் 7 மணிநேரம் ஆகும் என்றாலும், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த 2 நாட்கள் ஆகிறது. எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டையும் பயன்படுத்தும் வகையிலும் வாகனங்களை மாற்றியமைக்கிறேன். அதேசமயம் மின்சார வாகனமாக மட்டும் மாற்றியமைக்கும் பணியையும் செய்கிறேன்.

எரிபொருள் மற்றும் மின்சாரம் இரண்டையும் பயன்படுத்தும் வாகனங்கள் தயாரிக்க ரூ. 60 ஆயிரம் செலவாகிறது. முழுமையாக மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களை உருவாக்க ரூ.55 ஆயிரம் செலவாகிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்