ஒரு நாளைக்கு ஒரு சூரியன் விகிதத்தில் வளரும் மிக பெரிய கருந்துளை... இதனால் பூமிக்கு என்ன ஆபத்து?

சூரியனை விட 5 லட்சம் கோடி மடங்கு அதிக பிரகாசத்துடன் ஒளிரும் தன்மை கொண்ட பெரிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

Update: 2024-09-01 07:54 GMT

மெல்போர்ன்,

பால்வெளி மண்டலத்தில் ஆச்சரியம் அளிக்கும் பல விசயங்கள் உள்ளன. இதில் கருந்துளைகளும் ஒன்று. இந்த கருந்துளைகள் நட்சத்திரங்களை விழுங்கும் திறன் படைத்தவை. அவற்றை விழுங்கி பின்னர் ஒளியை உமிழும் தன்மை பெற்றவை.

இந்த கருந்துளைகளில் சில, மிக பெரிய உருவத்துடன் காணப்படும். அவை விஞ்ஞானிகளால் குவாசர் என அழைக்கப்படுகிறது. அவை அதிக வெளிச்சம் மற்றும் மின்காந்த கதிர்களை வெளியிடுவதுடன், ஒளியையும் உமிழும்.

இந்நிலையில், இந்த பால்வெளி மண்டலத்தில் புதிதாக குவாசர் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. நேச்சர் ஆஸ்டிரானமி செய்தி இதழில் இதுபற்றிய ஆய்வு முடிவு ஒன்று வெளிவந்துள்ளது.

கோப்புப்படம்

 

இந்த குவாசருக்கு ஜே0529-4351 என பெயரிடப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு சூரியன் என்ற விகிதத்தில் இது வளர்ச்சி அடைந்து வருகிறது. சூரியனை விட 5 லட்சம் கோடி மடங்கு அதிக பிரகாசத்துடன் ஒளிரும் தன்மை கொண்டது.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வானியியலாளர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான கிறிஸ்டியன் உல்ப் கூறும்போது, இந்நாள் வரையில், மிக விரைவாக வளர கூடிய கருந்துளை ஒன்றை நாங்கள் கண்டறிந்து உள்ளோம்.

அது 1,700 கோடி சூரியன்களின் நிறையை கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சூரியனை அது உட்கொள்கிறது. இதனால், அண்டவெளியில் அதிகம் ஒளிரக்கூடிய ஒன்றாக இந்த குவாசர் காணப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

அண்டவெளியில் நரகத்திற்கு இணையான இடமிது என அவர் கூறுகிறார். மேகங்கள் அதிவேகத்தில் செல்வது, அதிக வெப்பநிலை மற்றும் அதிக அளவில் காஸ்மிக் கதிர்களின் வெளியீடு ஆகியவை இதற்கான காரணிகளாக கூறப்படுகின்றன.

இந்த கடினம் வாய்ந்த சூழலிலும் கூட, வழக்கத்திற்கு மீறிய வகையில் குவாசரில் இருந்து ஒளி வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஒளி எல்லாம், 7 ஒளி ஆண்டுகள் விட்டம் கொண்ட அதிக வெப்பமுடைய டிஸ்க் பகுதியில் இருந்து வெளிவருகிறது. இதனால், நாம் வாழும் இந்த அண்டத்தில் இது மிக பெரிய டிஸ்க் ஆக இருக்க கூடும் என ஆய்வாளர்களில் ஒருவரான பிஎச்.டி. மாணவர் சாமுவேல் லாய் கூறுகிறார்.

1980-ம் ஆண்டில் இருந்தே விஞ்ஞானிகளின் பார்வைக்கு இந்த குவாசர் வந்துள்ளது. எனினும், சமீபத்திலேயே இதனை குவாசராக அவர்கள் அங்கீகரித்து உள்ளனர். ஏனெனில், குவாசருக்கான தன்மையுடன் இல்லாமல் அதனை விட அதிக வெளிச்சத்துடன் அது இருந்தது.

இந்த குவாசரால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி பார்க்கும்போது, பூமியில் இருந்து மிக அதிக தொலைவில் இந்த குவாசர் அமைந்துள்ளது. அதனுடைய ஒளியானது பூமியை வந்தடைய 1,200 கோடி ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. இதுதவிர, இந்த குவாசர்கள் நட்சத்திரங்களை ஒத்து காணப்படுகின்றன என வானியியலாளர்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், பூமிக்கு இந்த குவாசரால் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் எதுவும் தெரிய வரவில்லை.

எனினும், நட்சத்திரங்களில் ஒன்றான சூரியனில் இருந்து எவ்வளவு தொலைவில் இந்த குவாசர் உள்ளது என்பது பற்றிய விவரம், சூரியனுக்கான பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்