முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன மழைக்காலம் தொடங்குவதற்குள் வடிகால் பணிகளுக்கு விடிவுகாலம் கிடைக்குமா? சென்னை மக்கள் எதிர்பார்ப்பு
மழைக்காலம் தொடங்குவதற்குள் வடிகால் பணிகளுக்கு விடிவுகாலம் கிடைக்குமா? என்று சென்னை மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
மழைநீர் வடிகால் பணிகள்
வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாக சென்னை இருந்து வருகிறது. சாதாரண மழைக்கு கூட பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடியும். அதனை மாற்றும் வகையிலும், புதிய வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.
சென்னை மாநகராட்சியின் வடிகால் துறை மழைநீர் கட்டமைப்பு, மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையின் நீர்வழித்தடங்களான பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு மூலம் கடலில் கலக்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்கிறது.
சமீபத்தில் மாநில அரசு சென்னை பகுதியில் வெள்ளத்தை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிபுணர்களும் அதில் இடம்பெற்றனர்.
75 சதவீதம் பணிகள் நிறைவு
இந்த குழு முதல் இடைக்கால அறிக்கையை கடந்த ஜனவரி 3-ந்தேதியும், 2-வது இடைக்கால அறிக்கையை கடந்த மே 17-ந்தேதியும் சமர்ப்பித்தது. அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் மொத்தம் 1,058 கி.மீ. தூரத்துக்கு ரூ.4 ஆயிரத்து 227 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.
அதிலும் சென்னையில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சென்னை தியாகராயநகர், கொளத்தூர், புளியந்தோப்பு, வடபழனி, விருகம்பாக்கம், வேளச்சேரி மற்றும் அடையாறு பகுதிகளில் சுமார் 170 கி.மீ. தூரத்துக்கு இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதில் 130 கி.மீ. தூரத்துக்கு மேல் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது. மீதமுள்ள பணிகளை முடிக்கும் பணியில் அதிகாரிகள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வெள்ளப்பிரச்சினைகளை தீர்க்க...
170 கி.மீ. தூரத்தில் 130 கி.மீ. தூரத்துக்கு பணி முடிவுற்ற நிலையில், மீதமுள்ள 40 கி.மீ. பணிகள் 'சிங்காரச்சென்னை 2.0' திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதில் வெள்ளப்பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளான சீதாம்மாள் காலனி, பரங்குசாபுரம், ஹபிபுல்லா சாலை, வேம்புலியம்மன் சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, முனுசாமி சாலை, அசோக்நகர் 18-வது அவென்யூ, ரிப்பன் கட்டிடம், பி.வி.ராஜமன்னார் சாலை, பசுல்லா சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 27 கி.மீ. தூர பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளப்பாதிப்பு ஏற்படும் இடங்களில் பல ரெயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் இருப்பதால், தண்டவாளத்தின் குறுக்கே பணிகளை செயல்படுத்த நேரம் அதிகம் எடுக்கும் என்பதால், வெள்ளப் பிரச்சினைகளை தீர்க்க மற்றும் தீர்வு காண சென்னை மாநகராட்சி என்ஜினீயர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
முழுமை பெறாமல் இருக்கும் பணிகள்
எழும்பூர் பாந்தியன் சாலை, புளியந்தோப்பு, ஆதம்பாக்கம், ஏ.ஜி.எஸ். காலனி ஆகிய பகுதிகளில் 12 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. இதில் 10 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மீதமுள்ள 2 கி.மீ. தூரத்துக்கான பணிகளும் வருகிற 30-ந்தேதிக்குள் முடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும், சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள திருமலை சாலையில் பழைய வடிகால் இடிக்கப்பட்டு, அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோபதி நாராயண சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், அவைகள் முழுமை பெறாமல் ஆங்காங்கே சென்டிரிங் கம்பிகள் நீண்டுகொண்டும், மணல்களை ஓரத்தில் நிரப்பாமல் குவியல் குவியலாகவும் கிடக்கின்றன.
இதனால் மக்கள் அந்த பகுதிகளில் அச்சத்துடனேயே பயணிப்பதாகவும், அதிலும் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். சில இடங்களில் ஆபத்தான பயணமும் மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விடிவுகாலம் கிடைக்குமா?
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி சார்பில் 80 சதவீத பணிகள் தற்போது வரை நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வரும் நிலையில், அதற்குள் மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டு மழை வெள்ளத்தில் இருந்து விடிவுகாலம் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் சென்னைவாசிகள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
தப்பிப்போமா?
ஆரோக்கியமேரி என்பவர் கூறும்போது, 'கடந்த சில மாதங்களாகவே இந்த மழைநீர் வடிகால் பணிகள் நடக்கின்றன. அதுவும் முழுமையாக பணிகளை முடிக்காமல் ஆங்காங்கே வடிகால்கள் திறந்து கிடக்கின்றன. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பலருக்கு நோய் பாதிப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. மழை காலம் தொடங்குவதற்குள் பணிகளை முடிப்பார்களா? என்று எதிர்பார்த்து இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் நாங்கள் மிதக்கிறோம். இந்த ஆண்டு அதில் இருந்து தப்பிப்போமா? என அச்சத்தில் உள்ளோம்' என்றார்.
ஈஸ்வரன் என்பவர் கூறுகையில், 'வில்லிவாக்கம் பகுதியில் வடிகால் பணிகளுக்காக 8 மாதங்களுக்கு மேல் பள்ளங்கள் தோண்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கிறது. அந்த பகுதிகள் வழியாக கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ள நிலையில், சீக்கிரம் இந்த பணிகளை முடிக்கவேண்டும். மழை காலத்துக்குள் இந்த பணிகள் முடிக்காவிட்டால், இன்னும் சிரமத்தை சந்திக்க நேரிடும். அதற்குள் பணிகளை முடித்துவிடுவார்களா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது' என்றார்.
சென்னை தத்தளிக்கும்
மேலும், பெரும்பாலானோர் மழைநீர் வடிகால் திட்டம் நல்ல திட்டம்தான். ஆனால் அதை சரியான நேரத்தில் திட்டமிட்டு முடிக்க வேண்டும். மழை காலம் தொடங்குவதற்குள் இந்த திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்தால் வெள்ளப் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் வழக்கம் போல் இந்த ஆண்டு மழை காலத்திலும் சென்னை தத்தளிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றே தெரிவித்தனர்.
தோண்டப்பட்ட சாலைகள் எப்போது சீரமைக்கப்படும்?
பெருநகர சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிக்காக ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு இருக்கின்றன. அவ்வாறு மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது.
தோண்டப்பட்ட சாலைகள் அக்டோபர் 20-ந்தேதிக்குள் சீரமைத்து பணிகளை முடிக்க மாநகராட்சி என்ஜினீயர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்கேற்றாற்போல், பணிகள் முழு மூச்சில் நடந்து வருகிறது என்றும், தோண்டப்பட்ட சாலைகளை சீரமைப்பது தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க 1913 என்ற உதவி எண்ணை குடியிருப்பாளர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பள்ளம் தோண்டி 8 மாதம் ஆகிறது
பெருநகர சென்னை மாநகராட்சி, நகரின் முக்கிய வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் மழை காலத்துக்குள் நிறைவடையுமா? என்பது சந்தேகம் தான் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பாஸ்கர் என்பவர் கூறுகையில், 'தியாகராயநகரில் ஹபிபுல்லா சாலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே கிடக்கிறது. பணிகளும் தரமான அளவில் நடைபெறவில்லை. ஏதோ கடமைக்கு செய்வது போல் செய்கிறார்கள். மழை காலம் வரப்போகிறது. இந்த பகுதி என்ன நிலைக்கு ஆகப்போகிறதோ? தெரியவில்லை. அதற்குள் பணிகள் முடித்தால் நல்லது. ஆனால் அதற்குள் நிறைவடையுமா? என்பது சந்தேகம் தான்' என்றார்.