வறுமையை துளைத்தெடுத்த வில் வித்தை வீரர் பிரவீன் ஜாதவ்

2024-ம் ஆண்டு பிரான்ஸில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்டிருக்கிறார், பிரவீன் ஜாதவ். இவர் ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் செய்தி மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் இந்த நிலையை அவர் அடைய, பல சோதனைகளை கடக்க வேண்டி இருந்தது. அதை அவரே விளக்குகிறார்.

Update: 2022-07-31 10:24 GMT

25 வயதான பிரவீன் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகனாவார். வசதியின்றி வாடிய நிலையிலும் கடும் போராட்டத்தின் மூலம் ஒலிம்பிக்கில்வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

''மகாராஷ்டிராவில் நாங்கள் வாழும் பகுதி வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும். வில் வித்தை போட்டியில் பள்ளி அளவில் தான் அசத்தினேன். ஏனெனில் என்னிடம் ஆர்வம் மட்டுமே இருந்தது. சத்தான உணவிற்கும், பயிற்சிகளுக்கும் என்னிடம் போதிய பணமில்லை. இதனைப் பார்த்த எனது ஆசிரியர் விகாஸ் புஜ்பால், உணவு மற்றும் பயிற்சி பெற உதவியாய் இருந்தார். பள்ளி நாட்களில் தினமும் ஒரு மாணவரை சத்தான உணவு எடுத்துவரச் சொல்லி, அதை எனக்கு வழங்கினார். பயிற்சியின்போது தினமும் எட்டு முட்டைகளும் கோழிக்கறியும் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, அனைத்து செலவுகளையும் ஆசிரியர் புஜ்பாலே ஏற்றிருக்கிறார்'' என்றவர், வில்வித்தையில் சிறந்து விளங்குவதற்கு முன்பு, 5 ஆண்டுகளாக 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்று வந்துள்ளார். ஏதாவது ஒரு விளையாட்டு துறையில் தடம்பதித்து, சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது.

"எனது குடும்ப பொருளாதார நிலைமை சரியில்லை. வில் வித்தைப் போட்டியில் நான் தேர்வு பெறாவிட்டால், கூலி வேலைக்குத் தான் செல்ல வேண்டும் என்பதை அறிந்திருந்தேன். இதுவே என்னைத் தொடர்ந்து கடினமாக உழைக்க வைத்தது. தோல்விகளை ஏற்றுக் கொண்டேன். இருந்தாலும் என் முயற்சியிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. என் லட்சியத்தை நோக்கியே எனது கடுமையான உழைப்பு இருந்தது. ஓட்டம், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில்தான் ஆரம்பத்தில் எனக்கு ஆர்வம் இருந்தது. என் உடல் பலவீனமாக இருந்ததால் வில் வித்தை பயிற்சியை மேற்கொண்டேன்" என்று தெரிவித்தார்.

''கடந்த 2016-ம் ஆண்டு நடந்த உலக கோப்பைப் போட்டியில் கர்னல் விக்ரம் தயாள் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்தார். அவரது ஆதரவில் எனக்கு திறமையான பயிற்சியும் கிடைத்தது. கூடவே இந்திய ராணுவத்தில் வேலையும் கிடைத்தது. இதனால் குடும்ப வறுமையை ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது'' என்றவர், அடானு, தரன்தீப் ராய் போன்ற பிரபல வில்வித்தை வீரர்களுடன் இணைந்து கனடாவில் நடந்த உலக வில்வித்தை சாம்பியன் போட்டியில் பங்கேற்றார். அதில் சீனாவுக்கு எதிராக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்ற இவர்கள், அதற்கு முன்பு காலிறுதி ஆட்டத்தில் சைனீஷ் தைபீ மற்றும் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தனர். அந்தப் போட்டியில் நாக் அவுட்டுக்கு தகுதி பெற்றதால் அவர்களுக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. 2021-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டி, இவர்களுக்கு வெற்றியை பரிசளிக்கவில்லை என்றாலும், வரவிருக்கும் போட்டிக்கு கடுமையாக தயாராகி வருகிறார்கள்.

''உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றபோது அரசு அளித்த நிதியுதவியில்தான் சொந்தமாக வில்-அம்பு பயிற்சி உபகரணங்களை வாங்கியிருக்கிறேன். இல்லையென்றால், தேசிய பயிற்சி மையத்தின் உதவியைதான் அடிக்கடி நாடவேண்டியிருக்கும். நான் வெற்றிபெற, வாழ்க்கையில் முன்னேற பலரும் உதவுகிறார்கள். அவர்களுக்கு எத்தகைய கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை'' என்று கண்கலங்கும் பிரவீன், ஒலிம்பிக் வெற்றிகளின் மூலம் அவர்களுக்கான நன்றிக்கடனை செலுத்த தீவிரமாக பயிற்சி மேற்கொள்கிறார்.

பள்ளி ஆசிரியருக்கு அடுத்ததாக, பிரவீனின் சாதனைக்குத் தடையாக இருந்த பொருளாதாரச் சூழலைத் தகர்த்து எறிந்து உதவிய ஆசிரியர் புஜ்பால் மற்றும் கர்னல் விக்ரம் தயாள் ஆகியோரைப் பற்றி குறிப்பிடும்போது, கண்களிலிருந்து தானாகக் கண்ணீர் சிந்துகிறது.

Tags:    

மேலும் செய்திகள்