உத்தரகாண்ட்: 28 ராணுவ கட்டிடங்களில் விரிசல்; தலைமை தளபதி தகவல்

உத்தரகாண்டின் 28 ராணுவ கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளன என ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்து உள்ளார்.

Update: 2023-01-12 07:41 GMT



சமோலி,


உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் நகரங்களில் கோவில், வீடு, குடியிருப்பு, ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களில் பெரிய அளவில் திடீர், திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் அரசு நிர்வாகம் குழு அமைத்து செயல்படுத்தி வருகிறது. இஸ்ரோ, ஐ.ஐ.டி. அமைப்புகளுடன் இணைந்து இந்த விரிசலுக்கான காரணம் பற்றி ஆய்வும் செய்து வருகிறது.

தொடர்ந்து, கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை விதித்து உள்ளது. விரிசல் கண்ட ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களை இடிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. விரிசலானது தொடர்ந்து பரவி வருகிறது. இயற்கை பேரிடரால் இதுபோன்று ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உத்தரகாண்டின் ஜோஷிமத் பகுதியில் 25 முதல் 28 ராணுவ கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளன.

இதனால், ராணுவ வீரர்கள் தற்காலிக அடிப்படையில் பாதுகாப்பிற்காக வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தேவைப்பட்டால் ஆலி நகரில் அவர்கள் நிரந்தர அடிப்படையில் தங்க வைக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரில் பைபாஸ் சாலையில் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், முன்கள பகுதிகளுக்கு ராணுவ வீரர்கள் சென்றடைவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனால், அவர்கள் செயலாற்ற தயார் நிலையிலேயே உள்ளனர். உள்ளூர் நிர்வாகத்திற்கு தேவையான அனைத்து வித உதவிகளையும் நாங்கள் வழங்குவோம் என்று அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்