'22 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க பா.ஜ.க. மனு அளித்துள்ளது' - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

22 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு பா.ஜ.க. மனு அளித்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.;

Update:2024-12-11 17:40 IST

புதுடெல்லி,

தேர்தல் தோல்விக்கு பயந்து வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 22 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க பா.ஜ.க. மனு அளித்துள்ளதாக ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா மற்றும் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது;-

"அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்பதால் பா.ஜ.க. வேறு வழிகளில் வெற்றி பெற நினைக்கிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து 7 தொகுதிகளில் உள்ள சுமார் 22 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று கோரி பா.ஜ.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மொத்தமாக மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலைனைக்கு எடுத்திருப்பது மிகவும் ஆபத்தானது. குறிப்பிட்ட சில தொகுதிகளில் தங்களால் வெற்றி பெற முடியாது என்பது தெரிந்து பா.ஜ.க. இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தற்போது மொத்தமாக இத்தனை மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய காரணம் என்ன? இது தொடர்பாக தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்."

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பா.ஜ.க. தரப்பில் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்