"பிரபலங்களுக்கே பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால்.." சயிப் அலிகான் மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் கருத்து
நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்த பணிப்பெண்ணுடன் அந்த மர்மநபர் வாக்குவாதம் செய்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்குவந்த சயிப் அலிகானை, அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த சயிப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வந்தனர். தற்போது மர்மநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நடிகர் சயிப் அலிகான் மீது கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, மும்பையில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க மராட்டிய அரசு தவறிவிட்டதாக டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "நான் காலையில் எழுந்தவுடன், எனக்கு மனதை உடைக்கும் செய்தி கிடைத்தது. பிரபல நடிகர் 6 முறை கத்தியால் தாக்கப்பட்டுள்ளார் என்று. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல.. சல்மான் கான் தாக்குதல் மற்றும் பாபா சித்திக் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை போன்றது.
மாநிலத்தில் இரட்டை இயந்திரங்கள் இருந்தாலும் கூட, மும்பையில் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது. தற்போதைய அரசாங்கத்தால் நாட்டையும், எல்லையையும், தலைநகரையும் பாதுகாக்க முடியாது. பா.ஜ.க. மோசமான அரசியலை நிறுத்திவிட்டு வளர்ச்சிப் பணிகளைச் செய்ய வேண்டும்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இதனிடையே சயிப் அலிகான் குழு தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. நடிகர் சயிப் அலிகான் ஆபத்தில் இருந்து மீண்டு தற்போது குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.