நடிகர் சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: மம்தா பானர்ஜி வேதனை
நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.;
கொல்கத்தா,
பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்த பணிப்பெண்ணுடன் அந்த மர்மநபர் வாக்குவாதம் செய்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்குவந்த சயிப் அலிகானை, அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த சயிப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வந்தனர். தற்போது மர்மநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சயிப் அலிகான் உடல்நலம் குறித்து லீலாவதி மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி கூறும்போது, "சயிப் அலிகான் அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். அவருக்கு ஆறு இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு ஆழமானவை. ஒரு காயம் அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பிரபல நடிகர் சயிப் அலிகான் மீதான தாக்குதல் குறித்து கேள்விப்பட்டது மிகவும் கவலையளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், சட்டம் அதன் போக்கை எடுக்கும் என்றும், பொறுப்பானவர்கள் பொறுப்பேற்கப்படுவார்கள் என்றும் நம்புகிறேன். இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஷர்மிளா தி, கரீனா கபூர் மற்றும் முழு குடும்பத்தினருடனும் உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.