உ.பி. மகா கும்பமேளா: முட்கள் மீது படுத்து மக்களை ஆச்சரியப்படுத்திய துறவி
உத்தர பிரதேச மகா கும்பமேளாவிற்கு வந்திருந்த துறவி ஒருவர், முட்கள் மீது படுத்து வரும் செயலை ஒவ்வோர் ஆண்டும் செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.;
பிரயாக்ராஜ்,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும்.
புனித சங்கமத்திற்கு வருகை தருபவர்களுக்கு பல ஆச்சரிய விசயங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் காந்தே வாலே பாபா என்ற துறவி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் முட்கள் பரப்பிய பகுதிக்கு, மேலாடை எதுவும் அணியாமல் செல்கிறார். கையில் சிறிய குச்சியுடன், இடுப்பில் சின்ன ஆடையும், தலையில் காவி நிற துண்டும் அணிந்தபடி, பரப்பியிருந்த முட்கள் மீது சாய்ந்து படுத்து கொள்கிறார். இதனை பார்த்து சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இதுபற்றி அவர் கூறும்போது, நான் குருவுக்கு பணிவிடை செய்கிறேன். குரு எனக்கு அறிவும், முழு பலமும் அளித்துள்ளார். இது எல்லாம் கடவுளின் மகிமை. அதுவே நான் இதனை செய்ய உதவுகிறது என்று முட்களின் மீது படுத்தது பற்றி கூறுகிறார்.
நான் கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாகவே, இதனை செய்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் முட்கள் மீது படுத்து வரும் செயலை செய்து வருகிறேன். ஏனென்றால், இது என்னுடைய உடலுக்கு பலனளிக்கிறது. அது ஒருபோதும் என்னை துன்புறுத்தியதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
எனக்கு கிடைக்கும் தட்சணையில் பாதியை நன்கொடையாக கொடுத்து விடுவேன். மீதமுள்ளவற்றை என்னுடைய செலவுகளுக்கு பயன்படுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார்.