ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-01-16 11:36 IST

புதுடெல்லி,

விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. அவற்றிற்கு 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என பெயரிடப்பட்டது. இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், தலா 220 கிலோ எடை 2 செயற்கைக்கோள்களையும் சுமந்தபடி கடந்த 30-ம் தேதி விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டன. இதையடுத்து ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது.

விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் வெற்றி பற்றி குழுவினர் விரிவான தரவுகளை பகுப்பாய்வு செய்து வந்தனர். தரவுகள் சரிபார்ப்பு நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், டாக்கிங் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. இது ஒரு வரலாற்று தருணம் என்றும் குறிப்பிட்டு உள்ளது. செயற்கைக்கோள்களை இணைத்த பின்னர், அவற்றை கட்டுப்படுத்தும் பணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைப்பதை வெற்றிகரமாக நிரூபித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி சகோதரர்களுக்கும் வாழ்த்துகள்.

இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்