இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது: நானா படோலே பேட்டி

மக்கள் விருப்பப்படி தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைப்பதாக நானா படோலே தெரிவித்தார்.;

Update:2024-12-11 19:30 IST

நாக்பூர்:

மராட்டிய மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கூட்டணியான பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே தேர்தல் செயல்முறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, நாக்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோலாப்பூர் மாவட்டம் மார்கத்வாடி கிராமத்தில் உள்ள மக்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்பியதுடன், வாக்குச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என விரும்புகின்றனர். அங்கு மக்கள் இயக்கம் உருவாகிறது.

இதேபோல் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது குறித்து பல நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஆனால் அரசாங்கமோ மர்காத்வாடி மக்களின் குரலை ஒடுக்குகிறது. வாக்குச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்த திட்டமிட்டதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வலியுறுத்தி கிராம சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

மார்கத்வாடி சம்பவம் மராட்டிய மாநிலத்திற்கு மட்டுமானதல்ல. எனவேதான் மக்கள் விருப்பப்படி தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கிறோம்.

பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இலங்கையில் உள்ள ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. இப்போது இந்திய ஜனநாயகமும் ஆபத்தில் இருப்பதாக கவலைகள் எழுப்பப்பட்டு சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்