மின்னணு வாக்குகளும், ஒப்புகை சீட்டுகளும் சரியாக பொருந்தின.. மராட்டிய தேர்தல் அதிகாரி தகவல்
தெளிவான நடைமுறையைப் பின்பற்றியே தொகுதிக்கு 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டதாக மராட்டிய கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.;
மும்பை:
மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விவிபாட் எந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மாநில கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி கிரண் குல்கர்னி பதில் அளித்துள்ளார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
மராட்டிய மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஒப்புகைச் சீட்டு எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் சார்க்கப்பட்டன. ஒரு தொகுதிக்கு 5 வீதம் மொத்தம் உள்ள 288 தொகுதிகளிலும் 1,440 விவிபாட் எந்திரங்களில் சேகரிக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை நாங்கள் சரிபார்த்தோம். அவற்றின் முடிவுகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திர வாக்கு எண்ணிக்கையுடன் சரியாக பொருந்தின.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள 5 வாக்குச்சாவடிகளில் இருந்து 5 விவிபாட் எந்திரங்களை வாக்கு எண்ணும் பகுதிக்கு எடுத்துச் சென்றார்கள். அப்போது வாக்கு எண்ணும் முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள் உடனிருந்தனர். விவிபாட் ஒப்புகைச் சீட்டுகள் வேட்பாளர் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த எண்ணிக்கையானது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிடப்பட்டது.
தெளிவான நடைமுறையைப் பின்பற்றியே தொகுதிக்கு 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர்தல் ஆணைய பார்வையாளர், வாக்கு எண்ணும் முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் விவிபாட்-களை தேர்வு செய்ய குலுக்கல் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.