இன்ஸ்டாகிராம் காதலியை கரம்பிடிக்க துபாயில் இருந்து ஆசையாக வந்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணை கரம்பிடிக்கும் ஆசையுடன் தீபக் குமார் இந்தியா திரும்பியுள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார்(24) என்ற இளைஞர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்த மன்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பேசி வந்த இவர்கள், பின்னர் தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டனர். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இவ்வாறு 3 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைபேசி மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்த இவர்கள், ஒருமுறை கூட நேருக்கு நேராக சந்தித்துக் கொள்ளவில்லை. அதே சமயம் மன்பிரீத் கவுர் தனது புகைப்படங்களை மட்டும் தீபக் குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனிடையே தனது காதல் குறித்து தீபக் குமார் பெற்றோரிடம் கூறி, திருமணத்திற்கு சம்மதமும் வாங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தீபக் குமார் மற்றும் மன்பிரீத் கவுரின் திருமணத்திற்கு தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, தனது இன்ஸ்டாகிராம் காதலியை கரம்பிடிக்கும் ஆசையுடன் தீபக் குமார் இந்தியா திரும்பியுள்ளார். தீபக் குமாரின் வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. திருமண ஜோடிக்காக அலங்கரிக்கப்பட்ட காரில் மணப்பெண்ணின் சொந்த ஊரான மோகா மாவட்டத்திற்கு மணமகன் தீபக் குமார் அழைத்து செல்லப்பட்டார்.
அங்குள்ள 'ரோஸ் கார்டன் பேலஸ்' என்ற மண்டபத்திற்கு வருமாறு மன்பிரீத் கவுர் கூறியிருக்கிறார். ஆனால் மோகா மாவட்டத்திற்கு சென்று விசாரித்தபோதுதான் அங்கு அப்படி ஒரு மண்டபமே இல்லை என்பது தீபக் குமாரின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் மன்பிரீத் கவுரின் மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தீபக் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமண செலவுகளுக்காக மன்பிரீத் கவுருக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்ததாகவும் தனது புகாரில் தீபக் குமார் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த திருமணத்திற்காக தீபக் குமாரின் பெற்றோர் கேட்டரிங் சர்வீஸ், வீடியோகிராபர், வாடகை கார்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, மனதளவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீபக் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நூதன மோசாடிக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனார். மேலும் மன்பிரீத் கவுர் தனது உண்மையான அடையாளத்தை பயன்படுத்தினாரா? அல்லது அது ஒரு போலியான பெயரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணை நம்பி இளைஞரின் குடும்பம் ஏமாற்றமடைந்த சம்பவம் இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.