உ.பி.: தொடர் பலாத்காரம், கொலை வழக்குகள்... 17 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகள் விடுதலை

உத்தர பிரதேசத்தில் தொடர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் 17 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2023-10-16 08:18 GMT

அலகாபாத்,

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் நித்தாரி பகுதியில் தொடர்ச்சியாக சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர். 2005 முதல் 2006 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தொடர் படுகொலைகள் நடந்துள்ளன.

இந்த சம்பவத்தில் அந்த பகுதியை சேர்ந்த மொனீந்தர் சிங் பாந்தர் என்பவருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. அவருடைய வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுரீந்தர் கோலி என்பவர் சிங்கிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

கோலி, சிறுமிகளை கவர்ந்திழுத்து சிங்கின் வீட்டுக்கு அழைத்து செல்வார். இதன்பின்னர், கோலி மற்றும் சிங் இருவரும் அவர்களை பலாத்காரம் செய்து கொலை செய்து உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்கள் உடல்களை பல துண்டுகளாக்கி அவற்றை சாக்கடையில் வீசியுள்ளனர். சான்றுகளை அழிக்கும் வகையில் இப்படி செய்துள்ளனர். பாந்தரின் வீட்டருகே இருந்த சாக்கடையில், காணாமல் போன சிறுமிகளின் உடல் பாகங்கள் கிடந்துள்ளன.

இதனை அண்டை வீட்டுக்காரர்கள் கண்டறிந்து உள்ளனர். இதனால், வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. போலீசாரின் விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. பல்வேறு குழந்தைகள் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு சென்றது. இருவருக்கு எதிராக 2007-ம் ஆண்டில் 19 வழக்குகளை பதிவு செய்தது. இதுபற்றிய விசாரணையில், சிங்கின் வீட்டில் கோலி பல்வேறு சிறுமிகளை பலாத்காரம் மற்றும் கொலை செய்தது கண்டறியப்பட்டது.

உயிரிழந்த சிறுமிகளுடன் கோலி பாலியல் உறவில் ஈடுபட்டதும், அவர்களின் உடல் பாகங்களை உண்ட விசயங்களையும் கோலி விசாரணையில் கூறியுள்ளார். 20 வயது இளம்பெண் ஒருவரை, இருவரும் பலாத்காரம் மற்றும் கொலை செய்தனர் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதில், விசாரணை நீதிமன்றத்தில் கோலிக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு எதிராக 12 வழக்குகள் உள்ளன. வழக்கின் மற்றொரு குற்றவாளியான பாந்தர், 2 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். பாந்தருக்கு எதிராகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சுரீந்தர் கோலி மற்றும் மொனீந்தர் சிங் பாந்தர் ஆகிய இருவரையும் வழக்கில் இருந்து அலகாபாத் ஐகோர்ட்டு விடுவித்து உள்ளது.

போதிய சான்றுகள் இல்லாத சூழலில், அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என போலீசார் கூறினர். கோர்ட்டின் இந்த தீர்ப்பால், இருவருக்கு எதிரான மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்