பீகார்: மத ஊர்வலத்தின்போது பாலஸ்தீன கொடியை ஏந்திச்சென்ற 3 பேர் கைது - போலீசார் அதிரடி

மத ஊர்வலத்தின்போது பாலஸ்தீன கொடியை ஏந்திச்சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-15 12:32 GMT

 

பாட்னா,

இஸ்லாமிய மத பண்டிகையான மொஹரத்தை முன்னிட்டு பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் தமுலா பகுதியில் நேற்று இஸ்லாமிய மத ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் பங்கேற்றனர்.

இந்நிலையில், மத ஊர்வலம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அதில் பங்கேற்ற 3 பேர் பாலஸ்தீன கொடியை ஏந்திச்சென்றனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மத ஊர்வலத்தில் உரிய அனுமதியின்றி பாலஸ்தீன கொடியை ஏந்திச்சென்ற 3 பேரை கைது செய்தனர். மேலும், பாலஸ்தீன கொடியையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் உள்பட 38 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்