போர் விமானத்தில் இருந்து திடீரென விழுந்த பொருள்.. பொக்ரான் அருகே பரபரப்பு

மக்கள் வசிக்காத தொலைதூர பகுதியில் பொருள் விழுந்ததால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.;

Update: 2024-08-21 12:37 GMT

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில், இந்தியா வெற்றிகரமாக அணுசக்தி சோதனை நடத்திய பொக்ரான் பகுதியில் ராணுவத்தினர் போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வகையில் இன்று இந்திய விமானப்படையினர் அப்பகுதியில் போர் விமானத்தில் பறந்தபோது, திடீரென விமானத்தில் இருந்து ஒரு பொருள் தரையில் விழுந்தது.

பொக்ரான் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் அருகே இந்த பொருள் விழுந்துள்ளது. மிக உயரத்தில் இருந்து விழுந்ததால் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிலர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது சில பாகங்கள் சிதறி கிடந்தன. மக்கள் வசிக்காத தொலைதூர பகுதியில் பொருள் விழுந்ததால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. எனினும் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானத்தில் இருந்து கவனக்குறைவாக ஏர் ஸ்டோர் (ஒரு பொருள்) வெளியேற்றப்பட்டதாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் விமானப்படை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால், விழுந்தது என்ன பொருள் என்ற தகவலை வெளியிடவில்லை.

பொதுவாக, விமானத்தில் கொண்டு செல்லப்படும் வெடிமருந்துகள், வெடிகுண்டுகள் அல்லது மற்ற ராணுவ உபகரணங்கள் ஏர் ஸ்டோர் என குறிப்பிடப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்