மக்களவை தேர்தலை குறிவைத்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை குறிவைத்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அனிமேஷன் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-06-28 01:29 GMT

புதுடெல்லி,


நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான உத்திகளை வகுப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதிலும் அரசியல் கட்சிகள் முழு ஈடுபாடு காட்டத்தொடங்கி விட்டன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி, தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரத் துடிக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, குறைந்தபட்சம் 400 தொகுதிகளிலாவது பா.ஜ.க.வை எதிர்த்து பொது வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் எதிர்தரப்பு இறங்கி உள்ளது.

இந்த தேர்தலுக்காக ஆன்லைன் பிரசார யுத்தமும் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் முதலில் பா.ஜ.க. ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டது. அதில் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசை வழிநடத்திச்செல்கிற பிரதமர் மோடி, சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் திட்டங்களை நிறைவேற்றி, இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் கோடி (சுமார் ரூ.410 லட்சம் கோடி) பொருளாதாரமாக மாற்ற நடைபோடுவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் வீடியோ

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'மொகாபாத் கி துகான்' (அன்புக்கடை) என்ற தலைப்பில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, 1.43 நிமிடங்கள் ஓடுகிறது. இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி, குதிரை பூட்டிய ஒரு 'சாரட்' வண்டியை ஓட்டுவது போலவும், அந்த 'சாரட்' வண்டியின் உச்சியில் ஜனநாயகமும், ஊடகமும், அரசு அதிகார வர்க்கமும் சங்கிலியால் கட்டிப்போடப்பட்டுள்ளதாகவும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் உள்துறை மந்திரி அமித்ஷாவும் இடம்பெற்றிருக்கிறார். அவர் இந்து, முஸ்லிம்களை பிளவுபடுத்த முயற்சிப்பதுபோல காட்சி இடம் பெற்றுள்ளது.

அன்புக்கடை

இதற்கிடையே ராகுல் காந்தி, நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு, மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாகத் திகழ்ந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்தக்காட்சியின் பின்னணியில் ராஜ்கபூர் நடித்த 'அனாரி' படத்தின் "கிஸி கி முஸ்குராஹட்டான் பே ஹோ நிசார்" என்ற பாடல் ஒலிக்கிறது.

ராகுல் காந்தி லாரியில் பயணம் செய்து, 'நப்ராத் கா பஜார்' (வெறுப்பு கடைவீதி) என்ற பெயர்ப்பலகையை கடந்து செல்கிறார். அந்தப் பலகையை அவரது லாரி கீழே இடித்துத்தள்ளுகிறது. அப்போது 'அன்புக்கடை' உதயமாகிறது.

இன்னொரு புறம் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் 'டிவைட் அண்ட் ரூல்' ('பிரித்து ஆட்சி செய்வோம்') என்ற புத்தகத்தை ஆர்வமுடன் புரட்டும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, "வெறுப்பு கடைகளை மூடி அன்பு கடைகளை திறப்போம்" என்ற கோஷத்தை முன்னெடுத்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

மக்களவை தேர்தலை குறிவைத்து பா.ஜ.க.வுக்கு போட்டியாக காங்கிரஸ் களமிறக்கி இருக்கும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்